Sunday, July 18, 2010

காதல் போயின்... ... II

 முன்குறிப்பு: பகுதி II தாமதித்து இடப்பட்டுள்ளதால் பகுதி I-ன் கதாபாதிரங்களின் பெயர்களை ரீகால் செய்து கொள்ளவும், குழப்பங்களை தவிர்க்க. நன்றி!



26 ஏப்ரல் 2009. காலை 8:15.

           சென்னை. அடையார் அடுக்கு மாடிக் குடியிருப்பின் ஒரு வீடு. "வதனா!.. வதனா!!.. என்னோட ப்ளூ டைய்ய எங்க வெச்ச? நான் தான் டை எல்லாம் மேல இருக்குற ரேக்ல வைனு சொல்லிருக்கேன்ல?" அலுவலகத்திற்கு புறப்படும் அவசரத்தில் அரவிந்த். வதனா வந்து அலமாரியின் மேலறையைத் திறந்து டையை எடுத்து அவன் கையில் கொடுத்து விட்டு , "நீ எங்க வைக்க சொன்னியோ அங்கையே  தான் வெச்சிருக்கேன். உன்னோட ரெண்டு நொள்ளக்கண்ணையும் நல்லா தொறந்து பாரு." எனக் கூற, அரவிந்த் அசட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே, "எனக்கு தெரியும்டி. உனக்குத் தெரியுதானு டெஸ்ட் பண்ணேன்!", என்றான். "ஹி.. ஹி.. ஹி.. ஸோ ஃபன்னி. தொடச்சுட்டு ஆஃபீஸ் கெளம்புற வழிய பாரு. டைம் ஆச்சு." என அவள் பல்ப் கொடுக்க என, ஒரு வழியாக இருவரும் கிளம்பிச் சென்றார்கள். வதனாவின் அலுவலகத்தில் அவளை இறக்கி விட்டு கிளம்ப யத்தனித்த அரவிந்த் மீண்டும் நின்று திரும்பி, "வதனா! இன்னைக்கு சாயந்திரம் ஆஃபீஸ்லேர்ந்து அப்டியே சிட்டி மால்‍‍-க்கு போய்ட்டு வந்திடுவோம். சரியா 5.30 க்கு வந்திடுறேன் என்ன?"  எனக் கூறி விட்டு கிளம்ப, வதனா அந்த இடத்தை விட்டு அகலாமல் 2 நிமிடம் நின்று விட்டு பின்பு விறுவிறுவென அலுவலகத்திற்குள் நடக்கத் தொடங்கினாள்.

26 ஏப்ரல் 2009. மாலை 6:00. 

          இருவரும் மால்-ன் இரண்டாவது தளத்தில் நடந்துக் கொண்டிருக்கையில், முதுகில் சுளீரென்ற அடியுடன், "வதனா.....!!" என்ற குரல் வர, வலியுடன் பின்னால் திரும்பி பார்த்தால், கல்லூரி படிப்பு முடிந்தவுடன் யு.எஸ். கிளம்பிப் போன ப்ரீத்தி நின்றுகொண்டிருந்தாள். "ஹேய் ப்ரீத்தி!!!" வதனாவும் கத்த, தோழிகள் இருவரும் அணைத்துக் கொண்டு,  "என்னடி! நீ தானா இது?"  "இப்டி குண்டாயிட்ட!"  "முடி வெட்டிட்டியா?" என மாறி மாறி கேட்டுக் கொண்டிருக்கும்போது தான் அருகில் நிற்கும் அரவிந்தை கவனித்தாள் ப்ரீத்தி. சட்டென பேச்சை நிறுத்தி அவன் பக்கம் திரும்ப, "ப்ரீத்தி! இவர் தான் அரவிந்த. என் ஹஸ்பெண்ட்." எனக் கூறி முடிக்கவில்லை வதனா, இருவரையும் மாறி மாறி பார்த்த ப்ரீத்தி, "வதனா! எனக்கு அவசரமா ஒரு வேல இருக்குடி. நான் உன்ன மெயில்ல கான்டாக்ட் பண்றேன்." எனக் கூறித் திரும்பிப் பாராமல் நடக்கத் துவங்கினாள். ஒரு வெற்றுப் புன்னகையை அவள் முதுகிற்கு உதிர்த்து விட்டு அரவிந்துடன் நடக்கத் தொடங்கினாள் வதனா.

          கீழே முதல் தளத்தில் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்த ப்ரீத்தியின் கணவன் அருண் அவளைக் கண்டதும், "என்னக் கொடும சரவணன் இது! பழைய ஃப்ரெண்ட பார்த்துட்டேன்னு அந்த ஓட்டம் ஓடின? கீழ வர எப்டியும் ஒரு மணி நேரம் ஆகும். ஜாலியா சுத்தலாம்னு நெனச்சா அதுக்குள்ள வந்து நிக்கிற? என்ன ஆச்சு உன் ஃப்ரெண்டுக்கு?" எனக் கேட்டான். ப்ரீத்தி அவனை முறைத்துப் பார்த்து, " அவளப் பத்திப் பேசாதீங்க அருண்! அவளுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கான்னே எனக்கு சந்தேகமா இருக்கு! பொண்ணே இல்லங்க அவ!" எனப் பொறுமித் தள்ளத் தொடங்க, "ஹேய்! கூல்.. கூல்.. வா, இப்டி உக்காரு. என்ன ஆச்சு? சொல்லு." என அருகில் இருந்த நாற்காலியில் அவளை அமர்த்தி தானும் ஒன்றில் அமர்ந்தான். தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்ட ப்ரீத்தி, வதனா-ரகுவின் காதல் கதையையும், ரம்யாவின் திருமணத்திற்கு கிளம்பிப் போன ரகு அதற்குப் பின் காணாமல் போனதும், இப்போது வதனா வேறொருவரை மணம் முடித்திருப்பதையும் மூச்சு விடாமல் சொல்லி நிறுத்தினாள். "என்னப் பொண்ணு அருண் இவ? 5 வருஷம் ஒருத்தன காதலிச்சிட்டு இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்க எப்டி இவளுக்கு மனசு வந்துது?" இவ்வளவையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அருண், அவள் தோள் மேல் மெதுவாக கை வைத்து, "இதுல தப்பு என்ன இருக்கு ப்ரீத்தி? அவ ஒண்ணும் அவன ஏமாத்திட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கலையே? ஏதோ அவன் காணாம போயிட்டான். அதுக்காக? அவன நெனச்சுட்டே இருக்க சொல்றியா? அவளுக்குன்னு ஒரு குடும்பம், வாழ்க்கை... சரி, அவ்ளோ எதுக்கு? நீ, நான் எல்லாம் வாழ்ற மாதிரி அவ வாழ்ற வாழ்க்கைக்கும்  ஒரு அர்த்தம் வேண்டாமா?" என்றவனை இடைமறித்து, "அதுக்காக ரகு இருந்த இடத்துல இன்னொருத்தன எப்டிங்க‌ அவளால வெச்சுப் பாக்க முடியும்? என்றாள் ப்ரீத்தி. அருண் சிரித்துக் கொண்டே, "ரகுவ வெச்சிருந்த இடத்துல இவன வெச்சிட்டானு இல்லடா. அரவிந்த கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ரகுவ அவ காதலிச்சது காதலிச்சது தான். அது பொய் ஆகிடாது. ஆனா அது உண்மைங்கிறதுக்காக அந்த உண்மைய கட்டிகிட்டு வாழ்க்கைய ஓட்ட முடியாது. லைஃப் ஹாஸ் டு மூவ் ஆன் இல்லையா?" என அருண் விளக்க, அதை சரி என்றோ தவறு என்றோ பிரித்துக் கூற முடியாமல் குழப்பத்துடனேயே கிளம்பினாள் ப்ரீத்தி.

26 ‍ ஏப்ரல் ‍ 2009. மாலை 6:00. 

          அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்று நேரே சென்னை வந்தான் ரகு. வதனாவின் வீட்டின் முன் போய் நின்றான். வதனா இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு அவளை தூர இருந்தாவது ஒரு முறை பார்த்து விடும் ஆவலில் நின்ற அவனின் பின்புறமிருந்து ஆச்சரிய தொனியில் ஒரு குரல். "ரகு!!!!!!!", பின்னால் வதனா. அவன் கண்களை அவ்னால் நம்ப முடியவில்லை. அதே நிலை வதனாவிற்கும். ரகுவின் மனதில் பல கேள்விகள். 'தனியாக வந்திருக்கிறாளே?' 'அரவிந்த் எங்கே?' 'என்ன இது?' 'கழுத்தில் மஞ்சள் கயிறு எதுவும் தெரியவில்லையே?' தயக்கத்துடன், ""வதனா! உனக்கு கல்யாணம்...?", அரவிந்த். கண்களில் நீர் ததும்ப நின்ற வதனா, "கல்யாணமா?" என்றாள். 'அப்படியென்றால் வதனாவிற்கு திருமணம் ஆகவில்லையா?' 'எல்லாம் என் கற்பனையா?' என எண்ணி மகிழ்ந்த ரகு, "ஏன் வதனா? என்ன வெச்ச இடத்துல வேற யாரையும் வைச்சு பார்க்க முடியலயா உன்னால? நம்ம காதல நெனச்சுட்டே இருந்துடலாம்னு நெனச்சியா?" என அடுக்கிக் கொண்டே போக, வதனா, "ரகு, இப்டியெல்லாம் என்ன கேட்டா எனக்கு பதில் சொல்ல தெரியல ரகு. நீ இருந்த இடம். வேற ஒருத்தர வைக்கிறதுன்னுல்லாம் நான் எதுவும் யோசிக்கல. காதல நினைச்சுட்டே இருக்கணும்னெல்லாம் எந்த முடிவும் எடுக்கல. இனிமேல் என் வாழ்க்கைல என்ன நடந்திருக்கும்னும் எனக்கு தெரியாது. ஆனால் உன்னை காதலிச்சேன். காதலிக்கிறேன். காதலிச்சிட்டு இருப்பேன். இது மட்டும் உண்மைங்கிறது எனக்கு தெரியும்!

26 ஏப்ரல் 2009. காலை 8:15.

          தலையில் சம்மட்டியால் ஓங்கி அடித்தாற் போன்ற வலியுடன் கண் விழித்தான் ரகு. "அப்பா! அப்பா! இந்த மாமா கண்ண முழிக்கிறாரு பாருங்க. சீக்கிரம் வாங்கப்பா!" என ஒரு பிஞ்சுக் குரல். கண் திறந்து, "நான் எங்க இருக்கேன்?" என்றான் ரகு. வழக்கமாக இந்த கேள்வி கேட்கப்படும் இடம் மருத்துவமனையாகவும், வெள்ளை சுற்றத்தோடு, சுற்றிலும் மருத்துவர்களும் இருப்பர். ஆனால் ரகுவின் கண்களுக்குத் தெரிந்ததென்னவோ தலைக்கு மேல் ஓடுகளும், தன்னைச் சுற்றிக் கைலியுடன் நிற்கும் ஐந்தாறு பேரும் தான். அவனுக்கு ஞாபகம் இருந்த வரையில் ரம்யாவின் திருமணத்தின் முன்தினம் தாலியை குலதெய்வ கோயிலில் வைத்து எடுத்து வருவதற்காக டாடா சுமோவில் ஒரு படை கிளம்ப, தான் மட்டும் ஒரு நண்பனைச் சந்தித்து விட்டு வருவதாக சொல்லி, நண்பனின் யமஹாவை வாங்கி பறந்தான். பெரம்பலூர் அருகில் இருந்த கிராமத்தை நெருங்கி கொண்டிருக்கையில், ஒரு அம்பாசடர் காரின் மேது போய் மோதியது மட்டுமே ஞாபகம் இருந்தது. தான் இப்பொழுது இருப்பது வெளியுலகத்தில் இருந்து ஒதுங்கியே இருக்கும்  ஒரு கிராமம் என்பதும், சித்த வைத்திய நிபுணர்கள் பலர் இருக்கும் அந்த கிராமத்தில் அவ்வப்போது மருந்து வாங்க வெளியுலக ஆட்கள் பிரவேசிப்பார்கள் என்பதும், அக்கிராமத் தலைவரின் சகோதரர், அன்று ஒருவருக்கு சிகிச்சை செய்ய அவசரமாகச் செல்லும் வழியில் தான் அவர் வண்டியில் தான் அடிபட்டதும், உடன் அவர் அவனை இங்கு கொண்டு வந்து இதுநாள் வரை கவனிக்கப்பட்டதையும் அறிந்து கொண்டான். தன்னைச் சுற்றி நடப்பதை எதையும் நம்ப இயலாதவனாய் அங்கிருந்து கிளம்பினான் ரகு நேரே வதனாவின் வீட்டிற்கு அவள் அரவிந்துடன் மகிழ்வுடன் இருப்பதை தூர இருந்தாவது பார்த்து விடும் ஆவலில்.