நிலவின் முகம் பார்க்கையிலே உங்கள் முகமது தான் தெரிகிறதே!
ஞாயிறு தன் கரம் விரித்து என்னை அணைத்து விட
தொலைந்து போகும் திங்களைத் திக்கெட்டும் தேடியும் பயனில்லை.
பற்றற்று தான் போனதோ என்மேல்; இல்லை நான் செய்த பாவமோ?
என் குழப்பங்கள் குறித்து நான் புலம்ப, உம்ம் கொட்டத் தவறியதில்லை ஒரு நாளும் நீங்கள்.
என் செய்வதென இறுதியில் நான் நிற்க, உங்கள் முடிவைத் திணித்ததில்லை என்மேல் இதுவரை!
அலைபேசியில் நாம் பேசும் விதம் கண்டு, காதல் வியாதியென கருதியதுண்டு தோழியர் சிலர்.
இங்கனம் இருந்துமெனை மறந்தும் மறுத்ததும் தான் ஏனோ?
ஓரந்திப் பொழுதினிலே, கதிர்களையவன் இன்னும் தாழ்த்தாத வேளையிலே,
முகிலினை விலக்கி, எட்டிப் பார்த்து புன்னகை செய்கின்ற அம்முகம்!
'கதிர்கள் இருந்தாலென்ன போனாலென்ன? நானுண்டு எப்பொழுதும் உன்னுடன்' என உணர்த்திற்றே!
அம்மா! நீங்கள் என் சேயாக, இல்லை இல்லை; நான் உங்கள் தாயாக வேண்டுமே மறுஜென்மத்தில்!