Monday, April 12, 2010

காதல் போயின்... ...


        அட வீணாப் போன வெந்தயமே! நான் தான் சொன்னேனேடா வரலைனு. நீ பாட்டுக்கு அங போய் நின்னுட்டு ஏன் வரலனு கேட்டா என்ன பதில் சொல்ல சொல்ற என்ன?", வெடித்தாள் வதனா. "எது! வரலனு சொன்னியா? எப்படீ சொன்ன?", ரகுநாத். "ஏண்டா, மீட்டிங்ல இருக்கேன், அப்புறம் கால் பண்றேன்னு மெசேஜ் அனுப்பினதுக்கு, ஈவினிங் சிட்டி மாலுக்கு வர்றியா இல்லையானு மட்டும் சொல்லுனு நீ தானே கேட்ட. அதுக்கு நான் தான் இல்ல. வரலனு ரிப்ளை பண்ணேன்ல? இப்ப அங்க போய் நின்னுட்டு எப்ப வரனு...." என வதனா எகஸ்ப்ளணேஷன் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே இடையில் புகுந்தான் ரகு. "என்னது? வரலனு மெஸேஜ் அனுப்பினியா? எனக்கு வரலையே!" "வரலையா? உன் மெஸேஜ் பார்த்த உடனே ரிப்ளை பண்ணிட்டேனேடா!" சற்று கவலையுடன் வதனா. இதைக் கேட்டு டென்ஷனான ரகு, "அதெப்படி? மீட்டிங்ல இருக்கேன்னு அனுப்பினது மட்டும் வந்துது, இது எப்படி வராம இருக்கும்? நீ அனுப்பலேன்னு சொல்லு." எனக் கத்தினான். வதனாவும் லைட்டாக டென்ஷனாகி, "மெஸேஜ் வரலனு என்னக் கேட்டா? போய் ஏர்டெல்காரன கேளு" ஒரு 10 வினாடிகளுக்குப் பின்னர் ரகு, " இப்ப என்ன வர்றியா இல்லையா?"  " இங்கிருந்து கிளம்பி வரவே 2 மணி நேரம் ஆயிடும் ரகு. அப்புறம் வீட்டுக்கு நடுராத்திரிக்குப் போக சொல்றியா?", வதனா. " சரி, வர வேணாம், வை!" என ரகு அழைப்பைத் துண்டிக்க, வதனாவுக்கும் கோபம். அவளும் திரும்ப அழைக்கவில்லை.

        அடடா! செம சீரியஸான சண்டைய பாத்துட்டு இருந்ததுல நம்ம ஹீரோ, ஹீரோயினோட இன்ட்ரொடக்ஷனையே குடுக்கல போங்க. சரி, அவங்க சமாதானமாகிறதுக்குள்ள அத ஒரு தடவ பாத்திடுவோம் வாங்க. ஒரு 6 டோர்டோய்ஸ் சுருள் எடுத்து முகத்துக்கு முன்னாடி வெச்சுக்கோங்க. ஆமாங்க! நம்ம கத 6 வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிக்குது. ரகுவுக்கு சொந்த ஊரு நம்ம மதுரப்பக்கம். வதனாவுக்கு சிங்காரச் சென்னை. ரகு அஜித், சூர்யா கணக்காவும், வதனா அசின், நயந்தார மாதிரியெல்லாம் இருக்க மாட்டாங்க. ரகு மாதிரி ரகு இருப்பான். வதனா மாதிரி வதனா இருப்பாள். இவங்க தானே ஹீரோ ஹீரோயின். ரெண்டு பேரும் சந்திக்கிறதுக்கு பொதுவா ஒரு இடம் இருக்கணுமே! அங்க தான் திருச்சி மலைக்கோட்டைய டாப் ஆங்கிள்ள இருந்து ஜூம் பண்ணி காட்டுறோம். ரெண்டு பேரும் பி.ஈ படிக்க வந்த இடம் தி ராக் சிட்டி,  திருச்சி. ரெண்டு பேரும் முதன்முதல்ல சந்திச்சிக்கிட்ட உடனே, கண்களாலயே பேசி, பேக் க்ரௌண்ட்ல நம்தன நம்தன நம்தன நம்தம்னு ம்யூசிக் ஓடி, 4 வருஷமும் மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், முக்கொம்பு, சிங்காரத்தோப்பு, சின்னகடை வீதி, பெரியகடை வீதி, கல்லணைனு திருச்சில ஒரு இடம் பாக்கி விடாம சுத்தி, லவ்வோ லவ்வுனு லவ்வினாங்க. இப்போ சென்னைல ஆளுக்கொரு சாஃப்ட்வேர் கம்பெனியில வேல பாக்குறாங்க. ரெண்டு பேர் வீட்டுலயும் மேட்டர் தெரிஞ்சு, அப்டி இப்டினு சம்மதமும் வாங்கிட்டாங்க. சரி போதும். கொசுவர்த்தி சுருள கீழ வெச்சிடுங்க. இப்ப நிகழ்காலத்துக்கு வருவோம்.

        எங்க விட்டோம். ஆங்! சண்ட சண்ட. ரகு என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறாப்புல? அட, வதனா நம்பர டயல் பண்ணிகிட்டிருக்காறு. மறுபுறம் ஃபுல்லாக ரிங்போய் லைன் கட்டாகப் போகிற சமயத்தில்,  "ஹலோ!"  " செல்லம், சாரிடா. நீ அனுப்பின மெஸேஜ் இப்ப தான் வந்துது. ஐ ஆம் டெரிப்ளி சாரி மா!"  5 வினாடிகளுக்கு பின் "ம்ம்ம்" என்று    மட்டும் ஒரு பதில்.  "ஏய், அதான் சாரி சொல்றேன்ல. இன்னும் என்ன கோவம்?"  " ஆளப் பாரு! உன் சாரிய உன் ஜோபுக்குள்ள போட்டு நீயே வெச்சுக்கோ. மெசேஜ் இப்ப தான் வந்துதுனா அதுக்கு நான் என்ன பண்ணுவேன்? அந்த கத்து கத்திட்டு இப்ப சாரியாம்."  " வதனா! பாத்தியா. என்ன தப்பா நெனச்சுட்ட. நான் சாரி கேட்டதோட நிறுத்தல. மெஸேஜ லேட்டா டெலிவர் பண்ணி நம்ம ரெண்டு பேருக்கும் சண்ட மூட்டி விட்ட அந்த ஏர்டெல்காரன சட்டைய புடிச்சுக் கேட்டேன். அவன் உன் சிம் பி.எஸ்.என்.எல் லா, அதனால அவன போய் கேக்க சொல்லிட்டான். உங்க அப்பா அங்க தானே வேல பாக்குறாரு. சரி நம்ம போய் ப்ரச்சன பண்ணி மாமனார் வேல பாக்குற ஆஃபீஸ்க்கு கெட்ட பேரு வந்துடக்கூடாதேங்கிற நல்லெண்ணத்துல தான் அந்த மேட்டர அப்டியே விட்டுட்டேன்.  இதைக் கேட்டவுடன் குபுக்கென வதனா சிரிக்க, "அப்பாடா!  சிரிச்சுட்டா! அப்ப திருச்சி ப்ளான் கன்ஃப்ர்ம்ட்."  என்று கொக்கியைப் போட்டான்.

        சட்டென சிரிப்பை நிறுத்திய வதனா, " ஏய்! இது என்ன புதுசா நூல் விட்ற? என்னப் புதுக் கத இது?" எனக் கேட்டாள். "அட, மறந்துட்டியா? நம்ம க்ளாஸ் ரம்யா கல்யாணம் இருக்குல்ல வர்ற 21‍‍‍‍‍ ந் தேதி திருச்சில? அதுக்கு போறதுக்கு தான்." என ரகு கேஷுவலாக சொல்ல,  " நான் தான் அன்னிக்கு என்னோட கஸின் ஆர்த்தி கல்யாணம் இருக்கு, என்னால வர முடியாதுன்னு சொல்லிகிட்டிருந்தேன்ல ரம்யா கிட்ட. நீயும் பக்கத்துல நின்னு கேட்டுட்டு தானே இருந்த? அப்புறம் என்ன இப்போ?" என்றாள்.  உடனே கொஞ்சம் கெஞ்சும் தோணியில், " அது இல்லடா. 4 நாள் ஆகும் போய்ட்டு வர. 4 நாளும் உன்ன பாக்காம இருக்கணுமே" என்று சின்ன பிட் ஒன்றை முயற்சிக்க, வதனா அதை கரெக்ட்டாக கேட்ச் செய்து,  " ஐயோ, பாவம் புள்ள! இந்த பிட்டு போடுற வேலயெல்லாம் இங்க நடக்காது. ஒழுங்கா கெளம்பி போய்ட்டு வா. 4 நாள் நானாவது நிம்மதியா இருக்கேன்." எனக் கௌன்ட்டர் அட்டாக் கொடுத்தாள். இதற்கு மேல் வேலைக்கு ஆகாது, இப்போது தான் நடந்த சண்டைக்கே சமாதானம் ஆகியிருக்கிறாள் என முடிவு செய்து, இன்று தோசைக்கு தொட்டுக் கொண்ட சட்ணியில் உப்பு கொஞ்சம் தூக்கல், ஓட்டு போட்டதுக்கு விரல்ல வெச்ச மழி அழிஞ்சிடுச்சு என நாட்டுக்கு தேவையான அனைத்து நல்ல காரியங்களையும் 1 மணி நேரம் பேசி விட்டு கைபேசியை கீழே வைத்தார்கள்.

        மார்ச் 19, 2007. மதியம் 3 மணி. எக்மோர் ரயில் நிலையம். பல்லவனில் ரகு கிளம்ப, வழியனுப்ப வந்திருந்தாள் வதனா. மிஸ் யூ படலங்களெல்லாம் முடிந்து, ரயில் புறப்பட்டவுடன் அவன் முகம் தெரியும் வரை கையசைத்துக் கொண்டே நின்று விட்டு திரும்பி நடக்கத் தொடங்கினாள் வதனா.

தொடரும்......

Friday, April 2, 2010

Recursive கதை"நீ உயிரோட இருக்கிறதுல அர்த்தமே இல்லடா! உன்ன விட்டு வெச்சா இன்னும் எத்தன பொண்ணுங்களோட வாழ்க்கைய பாழாக்குவியோ? இதனால எனக்கு என்ன நடந்தாலும் கவல இல்ல" என்க் கூறிக் கொண்டே கையிலிருந்த உடைந்த குப்பியின் கூரிய விளிம்புகளால் அவனின் வயிற்றில் குத்தினாள். அவனைக் கொன்று விட்ட வெற்றிக் களிப்பில் கடகடவென சிரித்துச் சட்டென கண் விழித்தாள்.

தன் வீட்டின் படுக்கையறையில் இருந்தாள்.

நேரே அவனிடம் சென்றாள்.

"நீ உயிரோட இருக்கிறதுல அர்த்தமே இல்லடா! உன்ன விட்டு வெச்சா இன்னும் எத்தன பொண்ணுங்களோட வாழ்க்கைய பாழாக்குவியோ? இதனால எனக்கு என்ன நடந்தாலும் கவல இல்ல" என்க் கூறிக் கொண்டே கையிலிருந்த உடைந்த குப்பியின் கூரிய விளிம்புகளால் அவனின் வயிற்றில் குத்தினாள். அவனைக் கொன்று விட்ட வெற்றிக் களிப்பில் கடகடவென சிரித்துச் சட்டென கண் விழித்தாள்.

படுக்கையிலிருந்து துள்ளிய அவளை ஒரு ஊசி குத்தி உறங்கச் செய்தனர்.

நேரே அவனிடம் சென்றாள்.

"நீ உயிரோட இருக்கிறதுல அர்த்தமே இல்லடா! உன்ன விட்டு வெச்சா இன்னும் எத்தன பொண்ணுங்களோட வாழ்க்கைய பாழாக்குவியோ? இதனால எனக்கு என்ன நடந்தாலும் கவல இல்ல" என்க் கூறிக் கொண்டே கையிலிருந்த உடைந்த குப்பியின் கூரிய விளிம்புகளால் அவனின் வயிற்றில் குத்தினாள். அவனைக் கொன்று விட்ட வெற்றிக் களிப்பில் கடகடவென சிரித்துச் சட்டென கண் விழித்தாள்.

படுக்கையிலிருந்து துள்ளிய அவளை ஒரு ஊசி குத்தி உறங்கச் செய்தனர்.

நேரே அவனிடம் சென்றாள்.

"நீ உயிரோட இருக்கிறதுல அர்த்தமே இல்லடா! உன்ன விட்டு வெச்சா இன்னும் எத்தன பொண்ணுங்களோட வாழ்க்கைய பாழாக்குவியோ? இதனால எனக்கு என்ன நடந்தாலும் கவல இல்ல" என்க் கூறிக் கொண்டே கையிலிருந்த உடைந்த குப்பியின் கூரிய விளிம்புகளால் அவனின் வயிற்றில் குத்தினாள். அவனைக் கொன்று விட்ட வெற்றிக் களிப்பில் கடகடவென சிரித்துச் சட்டென கண் விழித்தாள்.

நேரே அவனிடம் சென்றாள்.

"நீ உயிரோட இருக்கிறதுல அர்த்தமே இல்லடா! உன்ன விட்டு வெச்சா......